Search This Blog

Sunday, April 19, 2009

இயற்கையின் வரப்பிரசாதம்

வரப்பிரசாதம் : ஆந்திராவில் கிடைத்த எரிவாயு வளம் : தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீங்கும்






இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் ஆந்திராவில் மின் உற்பத்தியை அதிகரிக்க, வசதியாக இந்த இயற்கை எரிவாயு உதவும். எரிபொருள் இல்லாமல் சிரமப்பட்ட ஆலைகளின் தவிப்பு ஓயும்.



ரிலையன்ஸ் உற்பத்தி சீராகி, அடுத்த சில மாதங்களில் ஆந்திராவில் அதிக மின்உற்பத்தி ஏற்படும் போது, தமிழகம் அதை வாங்கிக் கொள்ள முயற்சி மேற்கொள்ளலாம். அதே போல், ரிலையன்சுடன் பேசி இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் கொண்டு வந்து இங்குள்ள மின்உற்பத்தி நிலையங்கள், அல்லது பெரிய தொழிற்சாலைகளை இயக்க அரசு வழிவகுக்கலாம். உலகம் பூராவும் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை நம்மையும் பாதித்திருக்கிறது. இன்றைய நிலையில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைவாக இருந்தாலும், கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிக அளவு நம்பியுள்ள நாடு இந்தியா. அப்படி இருக்கும் சூழ்நிலையில் வங்கக் கடலில், கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் "கேஜி-டி6 பிளாக்' என்ற பகுதியில் ரிலையன்ஸ் நடத்திய துரப்பனப் பணிகளில் இயற்கை எரிவாயு இம்மாதத் துவக்கத்தில் கிடைத்தது. இது பெரிய வெற்றி. ஆறாண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுக்கு கிடைத்த மாபெரும் பரிசு. இந்த எண்ணெய்க் கிணற்றில் இருந்து எடுக்கத் துவங்கியதும், ஆண்டுக்கு 900 கோடி டாலர் ( ரூ.45 ஆயிரம் கோடி) அளவுக்கு கச்சா எண்ணெய் ஆண்டு தோறும் இறக்குமதி செய்வது தடுக்கப்படும். இத்தகவலை மத்திய பெட்ரோலியத் துறை செயலர் ஆர்.எஸ்.பாண்டே தெரிவித்தார்.



ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக டைரக்டர் முகேஷ் அம்பானி கூறும் போது, "இந்த வெற்றியில் ரிலையன்ஸ் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இங்கு கிடைக்கும் இயற்கை எரிவாயு, எண்ணெய் வளத்தில் இந்திய வளர்ச்சிக்கு உதவும்' என்று கூறினார். இந்த கேஜி -டி6 துரப்பனப்பணி தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு 4,200 கோடி டாலருக்கு (சுமார் இரண்டு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவில்) இயற்கை எரிவாயு தரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். இதில் தற்போது கிடைக்கும் இயற்கை எரிவாயு அளவு 25 லட்சம் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர்ஸ் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது இருமடங்காக விரைவில் அதிகரிக்கும். உச்ச கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரலில் 80 லட்சம் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் வரை தினமும் உற்பத்தி செய்ய முடியும். அத்துடன் கச்சா எண்ணெய் உற்பத்தியும் சேரும்போது, இந்தியாவின் இறக்குமதித் தேவை ஆறில் ஒரு பங்கு குறையும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.



இங்கு உற்பத்தியாகும் இயற்கை எரிவாயு, உரம் மற்றும் மின்நிலையங்களுக்கு பெரிதும் உபயோகமாகும். அந்த தொழிற்சாலைகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும். முதலில் இங்கு உற்பத்தியாகும் எரிவாயு நாகார்ஜுனா உரத் தொழிற்சாலைக்கு எரிபொருளாக அனுப்பப்பட்டிருக்கிறது. அடுத்ததாக மேற்கு இந்தியப் பகுதியில் உள்ள உரத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. அங்குழாய்களில் கொண்டு செல்லப்படும் இயற்கை எரிவாயு குஜராத்துக்கும் பயன்படும். இங்கே கச்சா எண்ணெய் உற்பத்தி தினமும் 5.5 லட்சம் பேரலாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு விலை நிர்ணயம் அரசு பெட்ரோலியத் துறையுடன் சேர்ந்து நிர்ணயம் செய்யப்படும்.



ஆந்திராவுக்கும், ராஜஸ்தானுக்கும் இயற்கை எரிவாயு அனுப்ப ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் ரிலையன்சிடம் தமிழகத்தில் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு வாங்க முடியும். நிலக்கரியால் இயங்கும் அனல் மின்உற்பத்தி நிலையங்கள் தற்போது தேவைப்படும் உயர்ரக நிலக்கரிக்கு சிரமப்பட வேண்டியிருக்கிறது. மாறாக இயற்கை எரிவாயு சற்று விலை கூடுதலாக இருந்தாலும், குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்புடன் நிரந்தரமாக குழாய் மூலம் கொண்டு வர முடியும். எரிபொருள் தேவைக்கு இறக்குமதியை நம்பியிராத காலம் வந்ததை இந்த உற்பத்தி காட்டுகிறது.